சனி, 22 அக்டோபர், 2011

கடாபி

சாக்கடைக் குழியில் பதுங்கிய கடாபி, கெஞ்சியும் புரட்சிப் படையினரால் சித்ரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லபட்டார் ?









புரட்சிப்
படையினரிடம் சிக்காமல் தப்பிப்பதற்காக தனது பாதுகாவலர்களுடன் பாதாள சாக்கடைக் குழிக்குள் பதுங்கினார் கடாபி. அவரைக் காப்பாற்றும் நோக்கில் அவரது பாதுகாவலர்கள் கடாபி உள்ளே இருப்பதாக கூறினார்.

இதையடுத்து உள்ளே இறங்கி கடாபியை வெளியே கொண்டு வந்த புரட்சிப் படையினர் கடாபியை சரமாரியாக அடித்து உதைத்து பின்னர் சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.

தனது உடலில் ஏற்பட்ட காயத்தால் கடும் அவதிப்பட்ட கடாபி, சுடாதீங்க, சுடாதீங்க என்று கெஞ்சியுள்ளார். ஆனால் புரட்சிப் படையினர் கடாபியை சுட்டுக் கொன்று விட்டனர்.



உலக அளவில் முக்கியமான சர்வாதிகாரிகளில் கடாபிக்கும் இடமுண்டு. லிபியாவை தனது சர்வாதிகாரப் பிடியில் வைத்திருந்த கடாபி, சர்வாதிகாரம், எதேச்சதிகாரம் ஆகியவற்றை மட்டுமே நம்பினார். மக்களின் நம்பிக்கை, அன்பைப் பெற அவர் தவறி விட்டார். இதனால்தான் தனது சொந்த மக்களாலேயே ஓடஓட விரட்டப்பட்டு கடைசியில் சாக்கடைக் குழியில் பதுங்க வேண்டிய நிலைக்கு அவர் போய் விட்டார்.

கடாபி ஆட்சி போய் புரட்சிப் படையினர் வசம் லிபியாவின் பெரும்பாலான பகுதிகள் வந்த நிலையில் அவரது சொந்த ஊரான ஷிர்தே நகர் மட்டும் பிடிபடாமல் இருந்தது. அதையும் சமீபத்தில் பிடித்தனர் புரட்சிப் படையினர். இதையடுத்து அங்கு நேட்டோ படையினர் உதவியுடன் புரட்சிப் படையினர் ஷிர்தேவை சல்லடை போட்டுத் தேடினர்.

அப்போது புரட்சிப் படையினருடன் அரசுப் படையினர் ஒரு இடத்தில் கடும்துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வேகமாக பாதாள சாக்கடைக் குழிக்குள் இறங்கி பதுங்கினர்.

இதைப் பார்த்த புரட்சிப் படையினர் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர் வெளியே வந்து சுடாதீர்கள், உள்ளே கடாபி இருக்கிறார். அவர் காயமடைந்திருக்கிறார் என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த புரட்சிப் படையினர் வேகமாக வந்தனர். உள்ளே பார்த்தபோது கடாபி காயமடைந்த நிலையில் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து கடாபியை வெளியே கொண்டு வந்தனர் புரட்சிப் படையினர். அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தும், சரமாரியாக அடித்தும் இழுத்து வந்து கீழே போட்டனர். அப்போது என்னை சுட்டு விடாதீர்கள் என்று கெஞ்சியுள்ளார் கடாபி. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் புரட்சிப் படையினர் கடாபியை சுட்டுக் கொன்று விட்டனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் உள்ள காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

1969ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் லிபியாவைப் பிடித்தார் கடாபி. அன்று முதல் லிபியாவை அவர் ஆட்டிப் படைத்து வந்தார். தனக்கு எந்த ரூபத்திலும் எதிர்ப்பு வராமல் பார்த்துக் கொண்டார். அமெரிக்காவைப் பகைத்துக் கொண்டார். சர்வாதிகாரமாக நடந்த இவர் நாட்டு மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெறத் தவறினார். தனதுசொந்த மக்களையே அவர் துன்புறுத்த ஆரம்பித்தார். அதுவே அவருக்கு எதிராக இப்போது விஸ்வரூபம் எடுக்கக் காரணமாக அமைந்து விட்டது.

அரபு நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியும், வடக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட புரட்சிகளும் லிபியாவுக்கும் பரவி இப்போது கடாபியின் மரணத்துடன் வந்து முடிந்துள்ளன. கடாபி வசம் கடந்த 42 ஆண்டுகளாக இருந்து வந்த லிபியாவை மீட்டுள்ள புரட்சிப் படையினர் அதை எப்படி சீரமைக்கப் போகிறார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொல்லப்பட்ட கடாபிக்கு 2 மனைவிகள். ஒருவர் 1970ம் ஆண்டிலேயே இறந்து விட்டார். இரு மனைவியர் மூலம் அவருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். அதில் இரண்டு மகன்கள் இறந்து விட்டனர்

வெள்ளி, 21 அக்டோபர், 2011

இரு நிகழ்வுகள்


15.03.2009, ஞாயிறு அன்று நான் பங்குபெற்ற இரு நிகழ்சிகள் பற்றிய பதிவு இது.

முதல் நிகழ்ச்சி தமுஎச (தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்) ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின நிகழ்ச்சி. என்னையும் தோழி தமிழ்நதியும் கவிதை வாசிக்க அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சி சுந்தரம் பள்ளி, எம்ஜியார் நகரில் சரியாக 5.45 மணிக்கு ஆரம்பித்தது. கவிஞர் பாரிகபிலன் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் அது. ஒரு கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான சரியான எடுத்துக்காட்டாக அமைந்தது அக்கூட்டம். எல்லோரையும் புன்னகையுடன் வரவேற்று, நிகழ்ச்சியை குளறுபடிகள் இல்லாமல் ஒரே சீராக அவர் எடுத்த சென்ற விதம் பாராட்டுக்குரியது. நான் சுமாராக ஒரு கவிதையை வாசித்தேன். என் கவிதையின் குறை தெரியாமலிருக்க பாரதியாரின் எழுச்சிமிக்க கவிதையொன்றினை வாசித்துவிட்டு வந்தமர்ந்தேன். அடுத்த கவிஞர் தமிழ்நதி வாசித்த கவிதை வெகு ஆழமான கவிதை. இன்னும் என் செவிகளில் அது ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சொல்லும் அத்தனை வீரியமானவை. கவிஞரின் உள் மனதிலிருந்து வெளிப்படும் அனல் சீற்றம் வார்த்தையின் வடிவமாய் பொங்கி நுரைத்து கேட்பவர் மனதிலெல்லாம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. மிகையாக சொல்லவில்லை. தமிழின் உச்சரிப்புத் திறன் மெருகேறி அவரின் அடுத்த கட்ட நகர்விற்கான அத்தனை விதயம் அவரிடம் இருப்பதைக் கண்டேன். என் தோழியாக மட்டுமல்ல ஒரு அற்புதமான படைப்பாளியின் வளர்ச்சியினை மிக அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.


நிகழ்ச்சியில் அடுத்து அடுத்து சிறுப்புரையாற்றியவர் எழுத்தாளர் ப்ரியா பாலு. இவர் ஒரு அரவாணி என்று சொன்னால்தான் நம்பமுடிகிறது. அவர் பேசியவை அரவாணி சமூகத்திற்கான குரல். ஊடகவியல் அவர்களை சிறுமைப்படுத்துவதை, சமூகத்தில் அவர்களுக்கான போராட்டங்களை, பொருளாதார ரீதியாக அவர்கள் படும் இன்னல்களைப் பற்றி பேசினார். சரளமாக பேசிய அவர் தன் தோழி திருநங்கை கல்கியை மேடைக்கழைத்து பேசச் சொன்னார். கல்கி இவ்வாழ்க்கை தங்களுக்கு இன்னல் தருவதாக இருந்த போதினும் அதையும் மீறி நாங்கள் சந்தோஷமாகவே இருக்கிறோம், எங்களுக்கு சந்ததிகள் கிடையாது ஆகவே பெரும் பொறுப்புகள் எங்களுக்கு இல்லை. வெகு சுதந்திரமாக மகிழ்ச்சியாக தன்னிறைவுடன் சுதந்திரமாக எங்களால் இயங்க முடிகிறது. பொருளாதார பிரச்சனை இருப்பியல் பிரச்சனைகளால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டாலும் நாங்கள் எங்களுக்காக போராடத் தொடங்கிவிட்டோம். போராடுவோம் வெல்வோம். என்று உரையாற்றினார். அவர் கூறிய சில உண்மைகள் சுடும் நிஜம். நம்மில் எத்தனை பேர் அரவாணிகளை ஆதரித்துள்ளோம்? சமூகம் அவர்களைப் பற்றிய தவறுதலான கற்பிதங்களை நம்மீது ஏற்படுத்திவிட்டதால் முன்முடிவுகளின்று ஒன்று ஏதோ இனம் தெரியாத அச்சத்தில், விலகிவிடுவோம், இல்லை அருவருப்புடன் ஏசிவிடுவோம். எவ்வளவு பெரிய வன்முறை இது. அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே, வானத்திலிருந்து குதித்தவர்களா என்ன? பெண்ணாக ஆசைப்பட்ட காரணத்திற்காக அவர்களை புறக்கணித்து கேலி செய்து, பாலியல் ரீதியாக அவர்களை ஒடுக்குமுறை செய்வது எவ்விதத்தில் நியாயம்? எனக்கு லிவிங் ஸ்மையல் வித்யா நல்ல பரிச்சயம். எங்கேயாவது கூட்டத்தில் சந்திக்கும்போதெல்லாம் கைகுலுக்கிக்கொள்வோம். அவளின் அழகிய தெற்றுப்பல் புன்னகையும் தோழமையும் ஒருபோதும் சொல்வதில்லை அவளின் பாலினத்தை, சரவணன் என்ற அடையாளம் பிடிக்காமல் மிகத் துணிவாக தன்னை வித்யாவாக உலகத்திற்கு மாற்றிக் காட்டிய எம் தோழிகளிடம் இருக்கும் மனத்தின்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு இது பிடித்தது இதை நான் செய்தேன் என்ற துணிவு பாராட்டுக்குரியதுதானே தோழமைகளே? ரோஸ் எவ்வளவு திறமையானவர் என்பதை அவர் எதிராளியைக் கேட்கும் நுட்பமான கேள்விகள் சொல்லும். இனி வரும் காலங்களிலாவது யாரையும் விட எந்தவிதத்திலும் குறைவில்லாத அரவாணிச் சகோதரிகளை நம்மால் இயன்ற வரை ஆதரிப்போம். எதுவுமே செய்ய இயலாவிட்டால் கூட பரவாயில்லை அவர்களுக்கு எதிரான கேலிப்பேச்சுக்களை இளக்காரங்களையாவது நிறுத்தி வைப்போம்.

தமுஎச உறுப்பினர்களிடம் அனுமதி பெற்று நாங்கள் கவிஞர் ‘அய்யப்ப மாதவனின் கவிதை நூலான ‘நிசி அகவல்’ விமர்சன கூட்டத்திற்கு சென்றோம். அங்கு வேறு விதமான மக்கள். வேறுவிதமான கவிதைகள். ஒரே நாளில் இரு வகையான மன நிலைக்கு ஆள்பட்டேன். கூட்டம் நடைபெற்ற இடம் அழகான சூழலில் இருந்தது. நாங்கள் போவதற்குள் கிட்டத்தட்ட எல்லாரும் பேசி முடித்திருந்தார்கள். பா.வெங்கடேசன் மற்றும் அஜயன் பாலாவின் உரையை மட்டும்தான் கேட்க முடிந்தது. பா.வெங்கடேசன் புரியாத இலக்கிய வார்த்தைகள் எல்லாம் உபயோகித்துப் பேசினார். பனுவல் என்றார், ரூரல் ஃபேண்டஸி, அர்பன் ஃபேண்டஸி என்றெல்லாம் விமர்சித்தார். அடுத்து பேசிய அஜயன் பாவெக்கு நேரெதிராக பேச்சு மொழியில் உரையாற்றினார். அய்யப்ப மாதவனின் ‘நிசி அகவல்’ என்னைப் பொறுத்தவரை எனக்கு பிடித்தமான தொகுப்பு. அவரின் நீர்வெளி, எஸ்.புல்லட் வாசித்திருக்கிறேன். நீர்வெளி அருமையான கவிதைகள் கொண்ட தொகுப்பு. எஸ்.புல்லட் ஏனோ என்னை அவ்வளவாக கவரவில்லை. அய்யப்பனின் கவி மனம் எதையும் சிலாகிக்கும், எப்போதும் கவிதை வரிகளினூடே தன் வாழ்வை தன் தேடலை அர்ப்பணித்துள்ள மனிதர் அவர், என் பிரியமான நண்பரும் கூட. நிசி அகவலில் கவிதையொன்றினை எனக்காக டெடிகேட் செய்திருக்கிறார். கட்டாயம் புத்தகத்தை வாசியுங்கள். தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது:

இதழ்வெளி குகை

இப்போதெல்லாம் மிக வினோதமாய் கேட்கும்
புகைவண்டியின் சத்தம்
அவள் இறங்கும் ரயில் நிலையத்தில்
பூக்கள் உதிர்ந்து விரியும் முட்களற்ற பாதை...
கண்களுக்குள் நடப்பவளை
என் கண்காணிப்பில் கூட்டிச் செல்கிறேன்
காற்றில் கூந்தல் வரையும் அவள் அழகை
பின் செல்லும் என் மீது மேகமாகிச் சிதறுகிறாள்
வெப்பம் தேடும் கைகளுக்குள் அவள் இருப்பதாக
தீயின் உறவில் தூசியாகி
ரயிலுக்குள் புலப்படாதவாறு பயணிக்கிறேன்.
உதட்டில் அமர்ந்து அவள் பேசும் போது
அவளுடன் உறவாடுகிறேன்
என் இருப்பை அறியாதவள்
தினமும் வரும் என்னைத் தேடுகிறாள்
நான் இல்லாத ரயில் நிலையத்தில்
அவள் கண்களில் என் முந்தைய சுவடுகள்!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011


ஒரு புத்தகத்தின் சுய சரிதை!

Royalty Free RF Clipart Illustration Of A Flowering Family Tree Growing On An Open Book by TA Images

ஒரு தாவரம்
வாழ்ந்ததற்கான
மொத்தச் சுவடுகளையும்
அழித்துவிட்டு
அதன் மீது
அடித்து திருத்தி
எழுதப்படுகின்றன
பல பெரிய மனிதர்களின்
சுய சரிதை அபத்தங்கள்!

உண்மையோ! புரட்டோ!
கருத்து சுதந்திரத்தை
பசை தடவி,
நூலால் பிணைத்து
பாதுகாக்க
நாளும் வியர்க்கிறான்
அச்சகத்தொழிலாளி !

நடைபெற இருக்கும்
புத்தக கண்காட்சியை
மனதில் வைத்து
வாடகைக்கு
'அடுத்தமாதம்' சொல்லி
மின்சாரக்கட்டனத்திற்கு
மட்டும்
கடன் வாங்குகிறார்
ஒரு புத்தகக்கடைக்காரர்!

அவசரமாய் மூடி
எழுகையில்
பக்கங்களின் இடையில்
படிமமாகி
சாபமிட்டு சாகின்றன
சித்தெறும்புகள்!

யாருக்கோ சமர்ப்பணம்
செய்து,
யார் யாருக்கோ
நன்றி கூறி,
நிறைவடைகிறது
புத்தகத்தில் எழுதப்படாத
அதன்
சுய சரிதை!
-யோவ்

கன்னம்.கம்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

Monday, August 8, 2011

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்குக் கொலை மிரட்டல் தமுஎகச கடும் கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,சென்னை-600018

பத்திரிகைச்செய்தி:8-8-2011

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா நடத்தும் புதுவிசை காலாண்டிதழில் இலங்கை எழுத்தாளர் யோ.கர்ணன் எழுதிய சிறுகதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அக்கதையை வெளியிட்தற்காக பெயர்தெரியா நபர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தரக்குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளனர்.அவர் இல்லாதபோது பகல் என்றும் இரவென்றும் பாராமல் அவருடைய துணைவியாரிடமும் இதே தரக்குறைவான வார்த்தைகளில் உன் கணவனைக் கொல்லாமல் விடமாட்டோம் என்று பேசி வருகின்றனர்.அக்கதை மீதும் கதையை வெளியிட்டதன் மீதும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அது இயல்பு.அதைப் புரிந்துகொள்ள முடியும்.அதைக் கருத்துரீதியாகச் சந்திக்கத் திராணியில்லாமல் , மறுப்புகளை வெளியிடத்தயாராக இருப்பதாக அவர் கூறியும் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக தமுஎகச மற்றும் இடதுசாரிகள் மீது அவதூறுகளை வெளியிடுவதல் உற்சாகம் காட்டும் ஒரு வலைத்தளத்தில் அவர்மீதும் இயக்கத்தின் மீதும் அவதூறு பொழிவதைத் தொடங்கியுள்ளனர்.இன்னும் ஆதவன் தீட்சண்யாவின் புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளரை மிரட்டியுள்ளனர்.அவர் ஆதவனின் புத்தகத்தை வெளியிடப் பயந்து திருப்பி அனுப்பியுள்ளார். இந்த வன்முறை நடவடிக்கைகளை ஆகஸ்ட் 6,7 தேதிகளில் கூடிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு விவாதித்தது.இது தமிழ்க் கருத்துலகில் மாற்றுக்கருத்தை எழுதுபவர்களை எழுதவிடாமல் வாயடைக்கச் செய்யும் அராஜக முயற்சியாகும்.சமீபகாலமாக இத்தகைய போக்கு அதிகரித்து வருகிறது.இந்தக் கோழைத்தனமான செயலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.மிரட்டும் தொலைபேசி எண்களைக்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தாக்குதலை ஜனநாயக ரீதியாக சந்திக்கவும் செயற்குழு தீர்மானித்தது. கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை கண்டனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்/வலைப்பூவில்/வலைத்தளத்தில்/முகநூலில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அருணன் ச.தமிழ்ச்செல்வன்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

தோழர் பாப்பா உமாநாத்!!!

தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி





அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில்
ஒருவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள்
தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் பாப்பா உமாநாத் அவர்கள்
இன்று ( 17 .12 2010 ) காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


தியாகத்தின் அடையாளமான தோழர் பாப்பா உமாநாத் அவர்களின்
வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு பாடம்.
அவர்களின் நெஞ்சுறுதி போற்றத்தக்கது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை
தடை செய்து அதன் உறுப்பினர்களை அரசு வேட்டையாடிக்
கொண்டிருந்த நேரம் அவரும் அவரது தாயாரும் சிறையில்
அடைக்கப்பட்டனர். அவரது அன்னை லட்சுமி சிறையிலேயே
இறந்து போக கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து
விலக ஒப்புக்கொண்டால்தான் அவரது உடலை
இறுதியாக பார்க்க அனுமதிக்க முடியும் என்று நிபந்தனை
போட்ட போது அதை ஏற்க மறுத்து கொண்ட கொள்கையிலும்
இணைந்த இயக்கத்திலும் உறுதியாக இருந்த தோழரின் அரும்
பணிகள் காரணமாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
இன்று வலிமையான அமைப்பாக உள்ளது.

மறைந்த தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு செவ்வணக்கம்!

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு படத்தை இவ்வளவு சீக்கிரம் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நான் விரும்பிக்காத்திருந்த ஒரு படம். அதுதான் நம்ப பங்குக்கு ஒரு விமர்சனத்தை எழுதிவிடலாமேன்னு.. என்ன காசா.. பணமா.?

மைல் கல் படங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்க வேண்டிய படம், காலம் காலமாக சொல்கிறோமே கதை இல்லை, கதை இல்லை என்று.. அதே சப்பை காரணத்தால் நூலிழையில் இடத்தைத் தவறவிடுகிறது. படத்தின் ஒளிப்பதிவு நேர்த்தியும், இசையும், உருவாக்கமும் பிரமிக்க வைக்கிறது. வழக்கமாக நல்ல படங்களில் படத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இசையும், பாடல்களும் திணறுவதைத்தான் பார்த்திருக்கிறோம். இங்கே பாடல்களுக்கு ஈடு தர படம் திணறுவதைப்போல எனக்கு ஒரு எண்ணம்.

இதுவரை பார்த்திராத கதைக்களம். இன்னும் ஆழமான கதையை சொல்லியிருக்கலாமோ.? ஒரு அகோரி சூழல் காரணமாக தமிழகம் வருகையில், இங்கே மாற்றுத்திறன் கொண்டோரை கொடுமைப்படுத்தி, பிச்சையெடுக்க வைத்து தொழில் நடத்தும் இருவரை கொன்று (தண்டனை), அவர்களால் கொடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பார்வையிழந்த பெண்ணை கொன்று (விடுத‌லை) மீண்டும் காசி திரும்புகிறார். இப்ப‌டி நான் க‌தை சொன்னால் ந‌ல்லாயிருப்ப‌து போல‌ தோன்றுகிற‌தே..

பிர‌ச்சினை என்ன‌வென்றால் அவ‌ர் இவ‌ர்க‌ளையெல்லாம் எந்த‌ ஸ்ட‌டியும் ப‌ண்ணாம‌லேயே பார்த்த‌வுட‌ன் தெரிந்துகொள்வ‌துதான். ச‌ரி, அது அவ‌ர்க‌ளின் (நிஜ‌ சாமியார்க‌ள்**) த‌னித்திற‌ன் என்று வைத்துக்கொண்டாலும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு ஆயிர‌ம் பேரையாவது (ஒரு வாரம் விடுப்பில் வந்திருக்கும்போது) கொல்ல‌ வேண்டியிருக்கும் இல்லையா? அப்புறம் அவரை வரவைத்து அவர் மீது தமிழ் சினிமா டிபிக்கல் அம்மா பாசத்தை கொட்டி, அவர் மறுத்து, பின்னர் அவரது எள்ளலான ஒரே வசனத்தில் தெளிந்து, அவர் சுயம்பு என்பதை புரிந்து உஸ்ஸ்.. அவரது அப்பா அம்மா காரெக்டர்கள் இவ்வளவு சொம்பைத்தனமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டாம். ச‌ரி விடுங்க‌.. குற்ற‌ம் சொல்ற‌துன்னா ந‌ம‌க்கு அல்வா சாப்பிடுற‌ மாதிரி ஆச்சுதே..

ஒரு இய‌க்குன‌ரின் எல்லா ப‌ட‌ங்க‌ளுமே ந‌ம‌க்கு பிடித்திருக்க‌வேண்டும் என்றோ அவை த‌ர‌மான‌தாக‌ இருக்க‌வேண்டும் என்ப‌தோ க‌ட்டாய‌மில்லை அல்ல‌வா? பாலா உண்மையிலேயே பாராட்டப்ப‌ட‌வேண்டிய‌வ‌ர். இதைப்போன்ற‌ வித‌வித‌மான‌ க‌தைக்க‌ள‌ங்க‌ளையும், நேர்த்தியான உருவாக்க‌த்தையும் கொண்ட‌ இன்னும் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளை அவ‌ர் த‌ர‌ வேண்டும் என‌ வாழ்த்துவோம்.

என‌க்கு ப‌ர்ச‌ன‌லா என்ன‌ வ‌ருத்த‌ம்னா, ப‌ட‌த்தில் காட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ 'மாற்றுத்திற‌ன் ப‌டைத்த‌ ம‌னித‌ர்க‌ளை'ப்பார்க்கும் போதே ந‌ம‌க்கு அத‌ன் வீரிய‌ம் விள‌ங்கிவிடுகிற‌‌து. இதில் அவ‌ர்க‌ளை ஒரு கட்டத்தில் கொடுமைப்ப‌டுத்துவ‌து போல‌ காட்சிக‌ள் வேறு அமைக்க‌வேண்டுமா? 'அது நிஜ‌த்தில் ந‌ட‌ந்துகொண்டிருக்கிற‌து. நீங்க‌ள் காண‌ விரும்பாவிட்டால் அது இல்லை என்றாகிவிடாது' என்ப‌து ச‌ரிதான். இருப்பினும் பாலா போன்ற‌ இய‌க்குன‌ர்க‌ள் வ‌ச‌ன‌ங்க‌ளாலேயே தேவையான தாக்க‌த்தை ஏற்ப‌டுத்திவிட‌முடியும் என்றே ந‌ம்புகிறேன். இன்னொரு காட்சியில் வில்லன் ஒரு ஊன‌முற்ற‌ பெண்ணை க‌ல்லால் தாக்குவ‌து. அதை அவ்வ‌ள‌வு நீண்ட‌ நேர‌ம் காட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. மேலும் அந்த பெரிய கல்லால் அவ்வ‌ளவு தூரம் தாக்க‌ப்ப‌டும் பெண் உயிர்பிழைப்ப‌து அரிது என்ப‌தை யாரும் உண‌ர்வ‌ர். இவ்வ‌ள‌வுக்கும் அந்த‌ப்பெண்ணுக்கு அடுத்தும் காட்சிக‌ள் இருக்கின்ற‌ன‌. இந்த‌ இர‌ண்டு காட்சிக‌ளைத்த‌விர‌ வேறெதுவும் கொடூர‌க்காட்சிக‌ள் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.

ஆனால் இயற்கையினாலேயோ, மனிதர்களாலேயோ மிதமிஞ்சிய அளவில் உடல் பாதிக்கப்பட்ட 'மாற்றுத்திறன்' கொண்டோரை மிக அருகில் காணும் சகிப்புத்தன்மை வேண்டும். இது பெண்களுக்கான‌ படமில்லை, அப்படி இப்படி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இப்போது பிற படங்கள் மட்டும் பெண்கள் என்ன குறைந்த பட்சம் ஆண்கள் பார்ப்பது போலவா வந்துகொண்டிருக்கின்றன? குழந்தைகள் பார்க்க நேர்ந்தால் பயமோ, குழப்பமோ அவர்களுக்கு நேரிடலாம் என்பதால் தவிர்க்கலாம்.

வியாழன், 19 நவம்பர், 2009

இணையத்தில் தமிழ்

தமிழில் இணையத்தை பயன்படுத்துவது மனதுக்கு இதமான ஒரு விஷயம் .
தமிழில் பயன்படுத்துவது குறித்து வழிகாட்டும் சில இணையத் தளங்களுக்கு இணைபு இங்கே

http://thamizhilakkiyam.rediffblogs.கம்

http://developer.thamizha.com/tamilkey.html

http://valaipadhivan.blogspot.com/2005/04/windows-98-me-firefox-matter.html

http://www.domesticatedonion.net/blog/index.php?itemid=470