வெள்ளி, 24 டிசம்பர், 2010

தோழர் பாப்பா உமாநாத்!!!

தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி





அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில்
ஒருவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள்
தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் பாப்பா உமாநாத் அவர்கள்
இன்று ( 17 .12 2010 ) காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


தியாகத்தின் அடையாளமான தோழர் பாப்பா உமாநாத் அவர்களின்
வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு பாடம்.
அவர்களின் நெஞ்சுறுதி போற்றத்தக்கது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை
தடை செய்து அதன் உறுப்பினர்களை அரசு வேட்டையாடிக்
கொண்டிருந்த நேரம் அவரும் அவரது தாயாரும் சிறையில்
அடைக்கப்பட்டனர். அவரது அன்னை லட்சுமி சிறையிலேயே
இறந்து போக கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து
விலக ஒப்புக்கொண்டால்தான் அவரது உடலை
இறுதியாக பார்க்க அனுமதிக்க முடியும் என்று நிபந்தனை
போட்ட போது அதை ஏற்க மறுத்து கொண்ட கொள்கையிலும்
இணைந்த இயக்கத்திலும் உறுதியாக இருந்த தோழரின் அரும்
பணிகள் காரணமாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
இன்று வலிமையான அமைப்பாக உள்ளது.

மறைந்த தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு செவ்வணக்கம்!

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு படத்தை இவ்வளவு சீக்கிரம் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நான் விரும்பிக்காத்திருந்த ஒரு படம். அதுதான் நம்ப பங்குக்கு ஒரு விமர்சனத்தை எழுதிவிடலாமேன்னு.. என்ன காசா.. பணமா.?

மைல் கல் படங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்க வேண்டிய படம், காலம் காலமாக சொல்கிறோமே கதை இல்லை, கதை இல்லை என்று.. அதே சப்பை காரணத்தால் நூலிழையில் இடத்தைத் தவறவிடுகிறது. படத்தின் ஒளிப்பதிவு நேர்த்தியும், இசையும், உருவாக்கமும் பிரமிக்க வைக்கிறது. வழக்கமாக நல்ல படங்களில் படத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இசையும், பாடல்களும் திணறுவதைத்தான் பார்த்திருக்கிறோம். இங்கே பாடல்களுக்கு ஈடு தர படம் திணறுவதைப்போல எனக்கு ஒரு எண்ணம்.

இதுவரை பார்த்திராத கதைக்களம். இன்னும் ஆழமான கதையை சொல்லியிருக்கலாமோ.? ஒரு அகோரி சூழல் காரணமாக தமிழகம் வருகையில், இங்கே மாற்றுத்திறன் கொண்டோரை கொடுமைப்படுத்தி, பிச்சையெடுக்க வைத்து தொழில் நடத்தும் இருவரை கொன்று (தண்டனை), அவர்களால் கொடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பார்வையிழந்த பெண்ணை கொன்று (விடுத‌லை) மீண்டும் காசி திரும்புகிறார். இப்ப‌டி நான் க‌தை சொன்னால் ந‌ல்லாயிருப்ப‌து போல‌ தோன்றுகிற‌தே..

பிர‌ச்சினை என்ன‌வென்றால் அவ‌ர் இவ‌ர்க‌ளையெல்லாம் எந்த‌ ஸ்ட‌டியும் ப‌ண்ணாம‌லேயே பார்த்த‌வுட‌ன் தெரிந்துகொள்வ‌துதான். ச‌ரி, அது அவ‌ர்க‌ளின் (நிஜ‌ சாமியார்க‌ள்**) த‌னித்திற‌ன் என்று வைத்துக்கொண்டாலும் குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒரு ஆயிர‌ம் பேரையாவது (ஒரு வாரம் விடுப்பில் வந்திருக்கும்போது) கொல்ல‌ வேண்டியிருக்கும் இல்லையா? அப்புறம் அவரை வரவைத்து அவர் மீது தமிழ் சினிமா டிபிக்கல் அம்மா பாசத்தை கொட்டி, அவர் மறுத்து, பின்னர் அவரது எள்ளலான ஒரே வசனத்தில் தெளிந்து, அவர் சுயம்பு என்பதை புரிந்து உஸ்ஸ்.. அவரது அப்பா அம்மா காரெக்டர்கள் இவ்வளவு சொம்பைத்தனமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டாம். ச‌ரி விடுங்க‌.. குற்ற‌ம் சொல்ற‌துன்னா ந‌ம‌க்கு அல்வா சாப்பிடுற‌ மாதிரி ஆச்சுதே..

ஒரு இய‌க்குன‌ரின் எல்லா ப‌ட‌ங்க‌ளுமே ந‌ம‌க்கு பிடித்திருக்க‌வேண்டும் என்றோ அவை த‌ர‌மான‌தாக‌ இருக்க‌வேண்டும் என்ப‌தோ க‌ட்டாய‌மில்லை அல்ல‌வா? பாலா உண்மையிலேயே பாராட்டப்ப‌ட‌வேண்டிய‌வ‌ர். இதைப்போன்ற‌ வித‌வித‌மான‌ க‌தைக்க‌ள‌ங்க‌ளையும், நேர்த்தியான உருவாக்க‌த்தையும் கொண்ட‌ இன்னும் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளை அவ‌ர் த‌ர‌ வேண்டும் என‌ வாழ்த்துவோம்.

என‌க்கு ப‌ர்ச‌ன‌லா என்ன‌ வ‌ருத்த‌ம்னா, ப‌ட‌த்தில் காட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ 'மாற்றுத்திற‌ன் ப‌டைத்த‌ ம‌னித‌ர்க‌ளை'ப்பார்க்கும் போதே ந‌ம‌க்கு அத‌ன் வீரிய‌ம் விள‌ங்கிவிடுகிற‌‌து. இதில் அவ‌ர்க‌ளை ஒரு கட்டத்தில் கொடுமைப்ப‌டுத்துவ‌து போல‌ காட்சிக‌ள் வேறு அமைக்க‌வேண்டுமா? 'அது நிஜ‌த்தில் ந‌ட‌ந்துகொண்டிருக்கிற‌து. நீங்க‌ள் காண‌ விரும்பாவிட்டால் அது இல்லை என்றாகிவிடாது' என்ப‌து ச‌ரிதான். இருப்பினும் பாலா போன்ற‌ இய‌க்குன‌ர்க‌ள் வ‌ச‌ன‌ங்க‌ளாலேயே தேவையான தாக்க‌த்தை ஏற்ப‌டுத்திவிட‌முடியும் என்றே ந‌ம்புகிறேன். இன்னொரு காட்சியில் வில்லன் ஒரு ஊன‌முற்ற‌ பெண்ணை க‌ல்லால் தாக்குவ‌து. அதை அவ்வ‌ள‌வு நீண்ட‌ நேர‌ம் காட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. மேலும் அந்த பெரிய கல்லால் அவ்வ‌ளவு தூரம் தாக்க‌ப்ப‌டும் பெண் உயிர்பிழைப்ப‌து அரிது என்ப‌தை யாரும் உண‌ர்வ‌ர். இவ்வ‌ள‌வுக்கும் அந்த‌ப்பெண்ணுக்கு அடுத்தும் காட்சிக‌ள் இருக்கின்ற‌ன‌. இந்த‌ இர‌ண்டு காட்சிக‌ளைத்த‌விர‌ வேறெதுவும் கொடூர‌க்காட்சிக‌ள் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.

ஆனால் இயற்கையினாலேயோ, மனிதர்களாலேயோ மிதமிஞ்சிய அளவில் உடல் பாதிக்கப்பட்ட 'மாற்றுத்திறன்' கொண்டோரை மிக அருகில் காணும் சகிப்புத்தன்மை வேண்டும். இது பெண்களுக்கான‌ படமில்லை, அப்படி இப்படி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இப்போது பிற படங்கள் மட்டும் பெண்கள் என்ன குறைந்த பட்சம் ஆண்கள் பார்ப்பது போலவா வந்துகொண்டிருக்கின்றன? குழந்தைகள் பார்க்க நேர்ந்தால் பயமோ, குழப்பமோ அவர்களுக்கு நேரிடலாம் என்பதால் தவிர்க்கலாம்.